கணவர் ராணுவ வீரர் என தெரிந்ததும் ரஷிய வீரர்கள் பாலியல் வன்கொடுமை; உக்ரைனிய பெண் குற்றச்சாட்டு

ரஷிய படைகளால் பல நூறு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என்ற உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டுக்கு ரஷியா மறுப்பு தெரிவித்து உள்ளது.
கணவர் ராணுவ வீரர் என தெரிந்ததும் ரஷிய வீரர்கள் பாலியல் வன்கொடுமை; உக்ரைனிய பெண் குற்றச்சாட்டு
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 48வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், 45 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த போர் காரணமாக ரஷியா அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும் போரை நிறுத்த அந்த நாடு மறுத்து வருகிறது. எனினும், தலைநகர் கீவ் உள்பட உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றும் ரஷிய படைகளின் முயற்சி உக்ரைன் வீரர்களால் முறியடிக்கப்பட்டு உள்ளது.

உக்ரைனின் கீவ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்பட அந்நாடு முழுவதும் பரவலாக ரஷிய படைகள் அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளன என உக்ரைனால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

ரஷிய படைகள் கீவ் நகரில் இருந்து பின்வாங்கியும் உள்ளன. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று கூறும்போது, ரஷிய படைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன என புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. இளம்பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் கூட பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

நாள்தோறும் அதிக அளவில் உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். சாக்கடைகளில் இருந்தும் உடல்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அவர் லித்துவேனியா நாட்டு ஆட்சியாளர்களிடம் வீடியோ லிங்க் வழியே கூறினார். இதனை கேட்ட லித்துவேனியா அதிபர் கீதானாஸ் நவுசிடா, கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு பெரிய பயங்கரம் என கூறியுள்ளார்.

போரில் பாதிக்கப்பட்டவர்களை கணக்கில் கொண்டு, மனித உரிமை அமைப்புகள் கூறும்போது, உக்ரைனில் பாலியல் பலாத்காரம் ஒரு போர் கருவியாக உபயோகிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

எனது கணவர் ராணுவ வீரர் என தெரிந்ததும் இரண்டு ரஷிய வீரர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என உக்ரைனிய பெண் ஒருவர் கூறியுள்ளார். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ரஷியா மறுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com