துப்பாக்கியுடன் ரஷிய படையை எதிர்க்கும் மிஸ் உக்ரைன் அழகி

மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அழகி அனஸ்தீசியா லென்னா, படையெடுக்கும் நோக்குடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொருவரும் கொல்லப்படுவார்கள் என இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Image Courtesy : dailymail.co.uk
Image Courtesy : dailymail.co.uk
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கீவில் ரஷியா-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 4,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ரஷிய படைகள் தலைநகர் கீவை சுற்றி வளைத்த காட்சிகளை செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளன.

ரஷியா மற்றும் உக்ரைன் போர் 5வது நாளாக நீடித்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள உக்ரைன் நாட்டு பொதுமக்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்தில் சேரும்படி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தனது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பொதுமக்களில் பலர் ஆர்வமுடன் படைகளில் சேர்ந்து வருகின்றனர்.

அந்நாட்டின் இளம் எம்.பி.யான ஸ்வியாடோஸ்லவ் யுராஷ் (வயது 26) கீவ் நகரை காக்க துப்பாக்கியுடன் சாலையில் இறங்கியுள்ளார். சொந்த நாட்டில் வசிக்கும் மக்கள் ராணுவத்தினரிடம் பயிற்சி பெறுகின்றனர். பாதுகாப்பு படை பிரிவில் சேருவதற்காக வெளிநாட்டில் இருக்கும் உக்ரைனியர்களும் சொந்த நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். வன பகுதியிலும், ஆளில்லா பகுதிகளிலும் ராணுவ அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்பட்டு நகர சாலைகளில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் அவர்கள் களமிறங்கி வருகின்றனர். ரோந்து பணியிலும் ஈடுபடுகின்றனர். தங்களை தன்னார்வ வீரர்கள் என அடையாளப்படுத்தி கொள்வதற்காக கைகளில் மஞ்சள் நிற பட்டைகளையும் அணிந்துள்ளனர்.

அவர்களுடன், கடந்த 2005ம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அழகியான அனஸ்தீசியா லென்னா (வயது 31) என்பவர் தனது நாட்டை காக்கும் பணியில் இறங்கி உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், படையெடுக்கும் நோக்குடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொருவரும் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கியில் மக்கள் தொடர்பு துறையில் மேலாளராக லென்னா பணிபுரிந்து வருகிறார். தனது செய்தியில், உக்ரைனுடன் துணை நில்லுங்கள், உக்ரைனுடன் கைசேருங்கள் என்ற இரண்டு ஹேஷ்டேக்குகளையும் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com