

லாகூர்,
டெல்லியில் இருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், லாகூரில் இருந்து திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் சம்ஜவுதா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில், இந்தியப் பகுதியில் டெல்லியில் இருந்து அட்டாரி வரையிலும், பாகிஸ்தான் பகுதியில் வாகாவில் இருந்து லாகூர் வரையிலும் இயக்கப்படுகிறது.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. மறுநாள், பாகிஸ்தான் விமானப் படை, எப்16-எஸ் ரக போர் விமானம் உள்ளிட்ட விமானங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது. அவர்களை, இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் விரட்டியடித்தன. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியதால் சம்ஜவுதா விரைவு ரயில் சேவையை பாகிஸ்தான் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, இந்தியாவும் ரத்து செய்தது.
பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் சற்று குறைந்துள்ளது. இதையடுத்து, இரு நாடுகளும் மீண்டும் ரயில் சேவையை தொடங்க ஒப்புக் கொண்டுள்ளதாக, இந்திய அரசு கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.
அதன்படி, பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் இருந்து சம்ஜவுதா விரைவு ரயில் நேற்று டெல்லிக்கு புறப்பட்டது. இந்த ரயில் மூலம், 174 பயணிகள் அட்டாரி எல்லை வந்தடைந்தனர். 12 பயணிகள் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் கடந்த 1971-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகு சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த 1976-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது