

டோக்கியோ,
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷிகெரு இஷிபா. ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த இவருடைய கட்சியினர் ஊழல் புகாரில் தொடர்ந்து சிக்கினர். இதனால் நாடாளுமன்றத்தில் இவருடைய கட்சி பெரும்பான்மையை இழந்தது.
இதன் நீட்சியாக கடந்த அக்டோபர் மாதத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து லிபரல் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த சனே தகைச்சி நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் அரசியல் வாரிசாக கருதப்படும் இவர் அந்த நாட்டின் முன்னாள் நிதி பாதுகாப்பு மந்திரி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்தவர். அவர் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். சீனாவின் ஆதிக்கத்தை வெளிப்படையாக எதிர்த்து வந்த அவரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
பொதுவாக ஜப்பானில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரித்தால் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு வழிவகுப்பார்கள். ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாகவே இதனை மேற்கொண்டு தங்களுடைய பதவிக்காலத்தை நீட்டித்து கொள்வது வழக்கமாக உள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த லிபரல் கட்சியை மீட்டு டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை எவ்வித இடையூறும் இல்லாமல் அமல்படுத்த சனே தகைச்சி முடிவு செய்தார். அந்தவகையில் மக்கள் செல்வாக்கை பெற்ற சனே, நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் பலத்தை மீட்பதற்காக நாட்டின் இரு அவைகளையும் கடந்த மாதம் கலைத்தார்.
பொதுத்தேர்தல் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டநிலையில் நேற்று நாடு முழுவதும் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. பொதுவாக ஜப்பானில் பிப்ரவரில் குளிர்காலமாக இருக்கும். 38 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடத்தியது இதுவே முதல்முறையாகும்.
மொத்தம் 465 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் சாதாரண பெரும்பான்மையை பெற 233 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இதனை சனே தகைச்சியின் லிபரல் கட்சி எளிதில் கடக்கும் என தேசிய ஊடகங்கள் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளன. மேலும் இஷின் கட்சியும் கூட்டணியில் உள்ளதால் 300 சீட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் சனே தகைச்சி ஆட்சி அமைப்பார் என ஆரூடம் தெரிவித்தன.
இந்தநிலையில், ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான ஆளுங்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 233 இடங்கள் பெற வேண்டிய நிலையில், ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி 316 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.