

புங்யி-ரி மலைப்பகுதியின் கீழே குகைகள் தோண்டிதான் இந்தச் சோதனைகள் அனைத்தும் நடத்தப்பட்டன.
வட கொரியா அணு குண்டு சோதனை நடத்தியதற்கு மறுநாள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதையும், வீசி எறியப்பட்ட சரளைக் கல் குவியல்களையும் காட்டுவதாக "38 நார்த்" தெரிவித்துள்ளது.
இந்த பாதிப்புகள் மன்டேப் மலையின் உயர்வான முனைக்கு அருகில் ஏற்பட்டுள்ளன.
வட கொரியா இதற்கு முன்னால் நடத்திய ஐந்து அணு குண்டு சோதனைகளில் காணப்பட்டதை விட அதிகமான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிவதாக இந்த இடத்தை பற்றிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த சோதனை சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தினாலும், மலையில் இருந்த பள்ளங்களில் சரிவு ஏதும் நடக்கவில்லை. என்றாலும், புங்யி-ரி அணு குண்டு சோதனை இடத்திலுள்ள ஒரு குகை சரிந்துவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, வட கொரியா நிலத்திற்கு அடியில் நடத்திய இச் சோதனை, 50 முதல் 120 கிலோ டன் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
50 கிலோ டன் என்பது, 1945 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரை துவம்சம் செய்த அணு குண்டை விட 3 மடங்கு பெரியதாக இருக்கும்.
எதிர்காலத்தில் இந்த இடத்தில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டால், மலை சரிந்து, கதிரியக்கம் வெளியாகும் ஆபத்து இருப்பதாக சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என்று"தி சவுத் சீனா மார்னிங் போஸ்ட்"செய்தி வெளியிட்டுள்ளது.