எண்ணெய் கிடங்கு தாக்குதலுக்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தாக்குதல் - 8 பேர் பலி

எண்ணெய் கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்லது.
Image Courtesy: AFP (சவுதி எண்ணெய் கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதல்)
Image Courtesy: AFP (சவுதி எண்ணெய் கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதல்)
Published on

சனா,

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடக்கம். இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இதற்கிடையில், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.

ஜூடா என்ற நகரில் அமைந்துள்ள அராம்கொ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்குகள் கொளுந்துவிட்டு எரிந்தன.

இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதி அருகே சர்வதேச கார் போட்டிகளில் முதன்மையான பார்முலா 1 கார் போட்டியும் நடைபெறுவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தால் ஜூடா நகரில் நடைபெற விருந்த பார்முலா 1 கார் போட்டி வேறு இடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அராம்கொ எண்ணெய் நிறுவன தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தியது.

ஏமனின் சனா மற்றும் ஹொடைடா ஆகிய இரு நகரங்களில் சவுதி கூட்டுப்படைகள் போர் விமானங்கள் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி தெரிவித்துள்ளது.

அதேவேளை, சவுதி நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பெண்கள் குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com