ஈரானிய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற சவுதி அரேபியா உத்தரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை ஈரான் மீறியுள்ளதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானிய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற சவுதி அரேபியா உத்தரவு
Published on

ரியாத்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஈரானின் தாக்குதலுக்கு சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் தாக்குதல் ‘அப்பட்டமான சர்வதேச விதிமீறல்’ என குறிப்பிட்டுள்ள சவுதி அரசு, அண்டை நாடுகளுக்கான கொள்கைகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை ஈரான் மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், ஈரானின் தாக்குதல் ‘இஸ்லாமிய சகோதரத்துவம்’ மற்றும் இஸ்லாமிய மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாக இருக்கிறது என்றும் சவுதி அரேபியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், ஈரான் ராணுவ அதிகாரி மற்றும் 4 தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நிலப்பரப்பின் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள சவுதி வெளியுறவுத்துறை அமைச்சகம், ஈரான் தூதரக அதிகாரிகளை ‘வேண்டப்படாத நபர்கள்’ என அறிவித்துள்ளது. தங்கள் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்க சவுதி அரேபியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com