

துபாய்
முன்னதாக சில ஊடகங்களில் தற்போதைக்கு அதிபர் ஆஸாத் பதவியில் தொடரலாம் என்றும் பின்னர் வரும் ஏற்பாடுகளில் அவருக்கான இடத்தை முடிவு செய்துகொள்ளலாம் என்பதை சவூதி அரேபியா பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாயின. இதை அமைச்சர் ஜூபைர் ஆட்சி மாற்றம் தொடர்பாக ஆஸாத்தின் எதிர்ப்பாளர்களால் அமைக்கப்பட்டுள்ள உயர் பேச்சுவார்த்தைக் குழுவிடம் கூறியதாகவும் அவை கூறின. இதை மறுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், ஜூபைரின் இக்கருத்துகள் தவறானவை என்று கூறியுள்ளது. ஏற்கனவே ஜெனீவா அறிக்கை மற்றும் ஐநாவின் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 2254 இன் நிலைப்பாட்டில் சவூதி அரசு உறுதியாக இருக்கிறது. ஆஸாத்திற்கு பதிலாக இடைக்கால அரசு ஒன்றை அமைத்து நாட்டை நிர்வாகிக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.
ஐநா தீர்மானம் புதிய அரசியலமைப்பை எழுதுவது, தேர்தல் நடத்துவது ஆகியவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஆஸாத்திற்கு ஆட்சி மாற்றத்தில் எவ்வித பங்கும் இருக்காது. சவூதி புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு சிரிய உயர் பேச்சுவார்த்தைக் குழு விரிவடைய ஆதரவு அளிக்கிறது. சவூதியின் இந்த அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐநா சார்பிலான சிரிய அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்றினை ஒட்டியே வெளியிடப்பட்டதாக தெரிகிறது. என்றாலும் இதுவரை ஆஸாத் தரப்புக் குழு எதிர்ப்பாளர்களின் ஒருங்கிணைந்த குழுவை சந்திக்கவில்லை. குழுக்கள் பலப்பிரிவுகளாக இருப்பதே அதற்கு காரணம் எனப்படுகிறது.