2018-ஆம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு

2018- ஆம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பார்வையாளர்களாக பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.
2018-ஆம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு
Published on

ரியாத்,

சவுதி அரேபியாவில், முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாக வரும் 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை பார்வையாளர்களாக அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மன்னராட்சி அமலில் உள்ளது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பெண்கள் கல்வி, பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும். இது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில் விஷன் 2030 என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்கள் வேலைவாய்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஜூலை மாதம், சவுதி அரேபிய பள்ளிகளில் பயிலும் மாணவிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 2018-ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சவுதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், ரீயாட், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களில் உள்ள விளையாட்டு அரங்கினுள் குடும்பமாக பெண்கள் செல்லலாம். சவுதி அரேபியாவின் விளையாட்டுத்துறை ஆணையம், இந்த மூன்று அரங்கங்களிலும், `2018இன் துவக்கம் முதல், குடும்பங்களை அனுமதிக்க தயாராகும் வகையில்` ஆயத்தப்பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளது. உணவகங்கள், தேநீர் விடுதிகள் மற்றும் விளையாட்டை பார்க்க பெரிய திரை உள்ளிட்டவை அரங்கினுள் வைக்கப்பட உள்ளது என அது தெரிவித்துள்ளது. தற்போது வரை, இந்த அரங்கங்கள் ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய இடங்களாக உள்ளன.

`விஷன் 2030` என்ற பெயரின் கீழ், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்த பல சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதம் முதல், பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுகின்றனர் என்று, கடந்த மாதம் அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு உலகம் முழுவதும் பெண் உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து இருந்தன. முன்னதாக கடந்த மாதம் கடைபிடிக்கப்பட்ட சவுதி அரேபியாவின் தேசிய தினத்தன்று, ரியாட்டில் உள்ள அரசர் ஃபாட் அரங்கில், நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com