

உலக கண்காட்சி
துபாயில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த உலக கண்காட்சி கொரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பு ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதில் அமீரகம் உள்ளிட்ட 192 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த கண்காட்சி வருகிற அக்டோபர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2022) மார்ச் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்காக துபாய் முதலீட்டு பூங்கா பகுதியில் 1,080 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக பல்வேறு நாடுகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ரூ.450 கோடி (25 கோடி திர்ஹாம்) செலவில் இந்திய அரங்கம் அமைக்கப்பட்டு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
காட்சியமைப்புகள்
இதில் 4 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்திய அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆங்கிலத்தில் 5 டிஎஸ் என்ற கருப்பொருளில் திறன் (டேலன்ட்), வர்த்தகம் (டிரேட்), பாரம்பரியம் (டிரடிசன்), சுற்றுலா (டூரிசம்) மற்றும் தொழில்நுட்பம் (டெக்கனாலஜி) என 5 அம்சங்கள் நிறைந்த காட்சியமைப்புகள் இந்திய அரங்கத்தில் இடம்பெற உள்ளது.இந்த அம்சங்களை சிறப்பான வகையில் வெளிப்படுத்துதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தலைமை தாங்கினார்.
ஆலோசனை
இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். துபாயில் இருந்து துணைத்தூதர் டாக்டர் அமன் புரி பங்கேற்றார். இதில் எந்தந்த வழிகளில் சிறந்த அம்சங்களை வெளிக்காட்டுவது என்பது குறித்து துணைத்தூதர் மற்றும் அதிகாரிகளுடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறும்போது, நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசானது அமீரகத்தை வர்த்தக பங்குதாரராக மட்டுமல்லாமல் சிறந்த உற்பத்தி மற்றும் சேவைகளை அளித்து முதலீடு செய்வதற்கும் ஏற்ற இடமாக உள்ளது என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அமீரகத்துக்கான முன்னாள் இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கலந்து கொண்டு பேசினார்.