ஆபாச வீடியோவில் பள்ளி சீருடை; தடை கோரி இங்கிலாந்து அரசுக்கு மாணவிகள் மனு

ஆபாச வீடியோவில் பள்ளி சீருடைகளுக்கு தடை விதிக்க கோரி அரசுக்கு பள்ளி மாணவிகள் மனு அளித்த விசித்திர சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
ஆபாச வீடியோவில் பள்ளி சீருடை; தடை கோரி இங்கிலாந்து அரசுக்கு மாணவிகள் மனு
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள சாண்ட்பேக் உயர்நிலை பள்ளியில் உள்ள மாணவிகள் குழு ஒன்று, அந்நாட்டின் தெருக்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பற்றி தொடர்ச்சியாக வந்த பல்வேறு புகார்களை அடுத்து, எதிர்வினையாற்றும் முடிவை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்ட மனுவை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதுபற்றி அலைஸ் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற 11ம் கிரேடு படிக்கும் மாணவி ஒருவர் கூறும்போது, நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு 11 வயது இருக்கும்போது, நாங்கள் அரசு பேருந்தில் இருந்தோம். பேருந்து ஓட்டுனர் எங்களிடம், இடுப்புக்கு கீழே இறுக்கி அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி விட்டாலும் சரி என எங்களிடம் கிண்டலாக கூறினார்.

நாங்கள் பள்ளி கூடத்தில் பழைய சீருடையை அணிந்திருந்தபோதும், நாங்கள் அணிந்திருந்த ஸ்கர்ட்டுகள் (பாவாடைகள்) குட்டையாக இருந்தபோதும், அதனை அவர் விரும்பினார் என்று கூறினார்.

சீருடை அணிந்து அரசு பேருந்தில் நாங்கள் சென்று, வந்தபோது, எங்களை வெளிப்படையாகவே தரக்குறைவாக, பாலியல் ரீதியாக, பலர் கிண்டலும் கேலியும் செய்தனர் என அலைஸ் கூறியுள்ளார்.

ஏன்? மக்கள் பள்ளி குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துகின்றனர் என்றும் எங்களை அசவுகரியப்படுத்துகின்றனர் என்றும் நாங்கள் வியந்து இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டு ஆன்லைனில் நடந்த சர்வே ஒன்றில், 14 முதல் 21 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் கூடுதலானோர் பள்ளி சீருடை அணிந்திருந்தபோது, பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இந்த சதவீதம் 3ல் ஒரு பங்காக இருந்துள்ளது.

பள்ளி சீருடைக்கு பதில் தங்களது சொந்த ஆடைகளை அணிந்து வரும்போது, இதுபோன்ற தொந்தரவுகள் குறைந்து இருந்தன என மாணவிகள் கூறுகின்றனர்.

ஆனால், சீருடையானது எல்லோரும் சமம் என உணர்த்துவதற்காக கொண்டு வரப்பட்டது. அதனை நீக்குவது என்பது சில மாணவ மாணவியர்கள் மற்றவர்களை விட அதிக பணம் படைத்தவர்கள் என அடையாளப்படுத்தும் என பள்ளி சீருடைக்கான கலாசார வரலாற்று ஆராய்ச்சியாளர் கேட் ஸ்டீபன்சன் கூறியுள்ளார்.

எனினும், பள்ளிகளில் இருந்து சீருடைகளை நீக்குவது சூழ்நிலையை மேம்படுத்தும் என சேண்ட்பேக் பள்ளி பிரசார குழுவினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று, ஆபாச வீடியோக்களில் இடம் பெறுவோர் பயன்படுத்த கூடிய ஆடையாக பள்ளி சீருடைகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை தடை செய்யவும் அவர்கள் மனுவில் கோரியுள்ளனர்.

எனினும், லண்டனில் உள்ள பாலியல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் கூறும்போது, பாலியல் துன்புறுத்தல்களுக்கு இந்த கடைகள் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லை. இந்த பொருட்களை கடைகளில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டால் மட்டுமே, அதுபற்றிய விமர்சனங்களை நிறுத்தி விடாது. பள்ளி மாணவியிடம் அதுபோன்று பேச வேண்டும் என ஒருவர் விரும்பிவிட்டால், அவர்கள் பேச போகிறார்கள். இதில் கடைகள் என்ன செய்யும்? என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே கடந்த 2019ம் ஆண்டு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்று கொண்டார். எனினும், அவரது அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இதனை தொடர்ந்து கடந்த 7ந்தேதி பிரதமர் பதவியில் இருந்து ஜான்சன் விலகினார். அவர் வகித்து வந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகினார். இதனால், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த சூழலில், இங்கிலாந்தில் தொடர் பாலியல் துன்புறுத்தலால் ஆபாச வீடியோக்களுக்கான பள்ளி சீருடை விற்பனைக்கு தடை விதிக்க கோரி பள்ளி மாணவிகள் அரசுக்கு மனு அளித்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. இதற்காக 13 ஆயிரத்து 400 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்றை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரதமர் ஜான்சன் பதவி விலகலால் அரசியல் நிச்சயமற்ற சூழலில் இந்த மனு மீது அரசு நடவடிக்கை எடுப்பது தள்ளி போயுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com