ஊழலுக்கு எதிராக தொடர் போராட்டம்; செர்பியா பிரதமர் ராஜினாமா


ஊழலுக்கு எதிராக தொடர் போராட்டம்; செர்பியா பிரதமர் ராஜினாமா
x

Image Courtesy : AFP

செர்பியா பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பெல்கிரேட்,

செர்பியா நாட்டில் உள்ள நோவிசாட் நகரில், கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி, ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்தனர். அந்த ரெயில் நிலையத்தில் நடந்த சீரமைப்பு பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதனை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் வெடித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மந்திரி உள்பட, பல்வேறு அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக்கை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

அதுமட்டுமின்றி, செர்பியாவில் ஜனநாயக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகவும், சர்வாதிகார போக்கு அதிகரித்து வருவதாகவும் மிலோஸ் வுசெவிக் அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த நிலையில், செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரதமரின் ராஜினாமாவை செர்பியா நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட பிறகு, அடுத்த 30 நாட்களுக்குள் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும், அல்லது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story