தாய் நாட்டுக்காக போரிட தயாரான டென்னிஸ் வீரர்...!!!

ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் இராணுவத்துடன் இணைந்துள்ளதாக உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டுக்காக போரிட தயாரான டென்னிஸ் வீரர்...!!!
Published on

கீவ்,

உக்ரைனில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய சண்டை நடந்தது. இரவு நேரத்தில் ரஷியப்படைகளின் வான்தாக்குதலை அடையாளப்படுத்தும் சைரன்கள் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக சுமி, பொல்டாவா, மரியு போல், கீவ் நகரங்களை இலக்காக கொண்டு கடும் வான்தாக்குதல்கள் நடைபெற்றன.

கருங்கடலில் இருந்து உக்ரைன் முழுவதும் ஏவுகணைகளை ரஷிய கடற்படை வீசி தாக்குதல் தொடுத்தது. பெலாரஸ் மற்றும் கிரிமியாவில் இருந்தும் வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அந்த இரவு நேரத்தில் பாதாள ரெயில் நிலையங்களிலும், பாதாள அறைகளிலும் உயிருக்குப் பயந்து அஞ்சி நடுங்கிய மக்கள், இரவுப்பொழுதில் கண் மூட முடியாமல் தவித்த தருணம், மனித குல சோகமாக, சாபமாக மாறி இருக்கிறது.

நேற்று பொழுது விடிந்தபோதே தலைநகர் கீவ், பதற்றத்தின் உச்சத்தில் உறைந்து போனது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. சைரன்கள் ஒலித்த வண்ணம் இருந்தன. 50-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளை தலைநகரில் ரஷியப்படைகள் நடத்தி உள்ளதாக உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர தெருக்களில் சண்டை மூண்டதால் எங்கும் துப்பாக்கி குண்டுகளின் முழக்கம் கேட்டுக்கொண்டே இருந்தது.

கீவ் நகரில் உள்ள முக்கிய மின்நிலையம் அருகே பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்புகள் கேட்டுக்கொண்டே இருந்தன. தலைநகர் கீவில் ஜூலியானி விமான நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள பன்னடுக்கு மாடி குடியிருப்பின் மீது அதிகாலையில் ரஷியா ஏவுகணை வீச்சு நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சேதம் அடைந்த பகுதியில் இருந்து 80 பேர் பாதுகாப்பாக மீட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

கீவ் நகரின் முக்கிய மாவட்டங்களுக்குள் ஊடுருவும் ரஷிய படைகளின் ஆரம்ப கட்ட முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன. கீவ் நகரை கைப்பற்ற தொடர்ந்து சண்டை வலுக்கிறது. ஏவுகணை தாக்குதல், துப்பாக்கிச்சண்டை என ரஷியா தீவிரம் காட்டினாலும் கூட, தலைநகரம் கீவ் இன்னும் உக்ரைன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் இராணுவத்துடன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ல் ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றில் பங்கேற்ற ஸ்டாகோவ்ஸ்கி, தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக ஹங்கேரிக்கு அனுப்பி வைக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக ஸ்டாகோவ்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு ராணுவ அனுபவம் இல்லை, ஆனால் துப்பாக்கியை கையாளும் அனுபவம் எனக்கு உள்ளது. என் அப்பாவும் சகோதரனும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். ஆனால் நான் அவர்களிடம் அடிக்கடி பேசி தைரியப்படுத்துகிறேன். அவர்கள் வீட்டின் அடித்தளத்தில் தூங்குகிறார்கள். நிச்சயமாக, நான் சண்டையிடுவேன், நான் திரும்பி வர முயற்சிக்கும் ஒரே காரணம் இதுதான் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com