அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியதா? பதிலளிக்க சீனா மறுப்பு


அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியதா? பதிலளிக்க சீனா மறுப்பு
x
தினத்தந்தி 28 Sep 2024 2:37 AM GMT (Updated: 28 Sep 2024 8:29 AM GMT)

சீன கடற்படையில் 234 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட 370 கப்பல்கள் உள்ளன. அந்த நாட்டு கடற்படையில் மொத்தம் 60 நீர்மூழ்கிகள் உள்ளன

வாஷிங்டன்,

அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் வாலாட்டும் சீனா, தென் சீனக்கடலுக்கும் உரிமை கோரி வருகிறது. இதற்காக புருனே, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பிற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக சீனா தன் கடற்படையை அசுரவேகத்தில் கட்டமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வூஹான் நகரில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை அந்நாடு வடிவமைத்து வந்தது. இந்த கப்பல், கட்டுமானத்தின்போதே நீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை 15ம் தேதி எடுத்த செயற்கைக்கோள் புகைப்படத்தில், சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. நீரில் மூழ்கிய அந்த கப்பல், கிரேன் உதவியுடன் துாக்கி நிறுத்தப்படுவது அந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. கப்பல் நீரில் மூழ்கிய சமயத்தில் அணுசக்தி எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததா என்ற விபரம் தெரியவில்லை. அணு எரிபொருள் இருந்திருந்தால் நிச்சயமாக கதிர்வீச்சு ஏற்பட்டிருக்கும். புதிய அணு சக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியதை சீன அரசு இதுவரை மறைத்து வருகிறது. சீன நீர்மூழ்கிகளின் வலிமை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், சீன தூதரக அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள சீன தூதரக அதிகாரி கூறுகயில், " நீங்கள் கேட்கும் விஷயத்தில் எங்களுக்கு பெரிய அளவில் தகவல் எதுவும் இல்லை. தற்போதைக்கு பதிலளிக்க கூடிய அளவுக்கு எங்களிடம் தகவல் எதுவும் பகிரப்படவில்லை" என மழுப்பலாக கூறினார். தங்கள் நாட்டின் ராணுவ வல்லமைக்கு பின்னடைவு ஏற்படும் வகையில் இந்த நிகழ்வு இருப்பதால், இதை சீனா மூடி மறைக்க முயற்சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


Next Story