

வாஷிங்டன்,
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் வாஷிங்டனை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் 20 மாகாணங்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டிருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
இதற்கிடையில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான சோதனை கருவிகளுக்கு அமெரிக்காவில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் பரவின. ஆனால் அதனை மறுத்த உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான், இந்த வார இறுதிக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா சோதனை கருவிகள் தயாராக இருக்கும் என்று கூறினார்.
இந்த நிலையில், கொரோனா தொற்றை கண்டறிய போதுமான சோதனை கருவிகள் இல்லை என்று வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டு உள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான தலைவருமான மைக் பென்சும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். கொரோனா தாக்கம் குறித்து, வெள்ளை மாளிகையில் நடந்த அவசர கூட்டத்துக்கு பின், பத்திரிகையாளர்களிடம் பென்ஸ் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை. தற்போது, 10 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகள் தேவை உள்ளது.
அவற்றை ஒரு வாரத்திற்குள் தருமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அது சாத்தியமில்லை. அவற்றை ஒரு வாரத்துக்குள் தயாரிக்க இயலாது.
எனினும் சோதனை கருவிகள் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்த இன்னும் வழிகள் உள்ளன. அதே சமயம் அடுத்த வார இறுதிக்குள் நாடு முழுவதும் சோதனை கருவிகளை வினியோகிக்க முடியும் என்பதை உறுதியாக கூறலாம் என்று அவர் கூறினார்.
இதனிடையே கொரோனா தாக்கத்தை சமாளிக்க பெரும் அவசர நிதியாக 8.3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.61 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
இந்த மசோதாவில் ஜனாதிபதி டிரம்ப், விரைவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா தாக்குதல் காரணமாக கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ள கிராண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் உள்ள பயணிகளுக்கு தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இத்தாலி நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்த ரோட் தீவு மாகாணத்தை சேர்ந்த 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.