

கொழும்பு,
அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. முக்கியமான சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சமீபத்தில் வெகுவாக குறைக்கப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறையுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டில் வழக்கமாகிவிட்டது.
அத்துடன் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.283 ஆகவும், டீசல் விலை ரூ.176 ஆகவும் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க வருகிற 23-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையில் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையில் கொழும்பு யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளிலும் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயுவை பெற்று செல்கின்றனர். இதன் காரணமாக இலங்கை மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் கூட சிலிண்டர் கிடைக்காமல் போகின்றது. இதனால் சில இடங்களில் தள்ளு-முள்ளு போன்ற சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.
இதனிடையே உக்ரைன் போரால் எதிர்வரும் நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.