

லண்டன்
இங்கிலாந்தில் பாலியல் சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் நகை, பணம் கொள்ளையடித்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
ரொமேனியா நாட்டை சேர்ந்தவர் அதினா மிஹாய் (வயது 31). சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டுக்கு வந்த இவருடைய காதலர் மேடலின் துமித்ரு (வயது 30). இதில் பணத்தேவைக்காக அதினா ஆன்லைன் வழியே பாலியல் சேவை என விளம்பரம் செய்துள்ளார். அதில், தன்னை பாலியல் தொழிலாளி என்றும் ஆண்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.
இதன்படி, தொடர்பு கொள்ளும் ஆண்களின் வீட்டுக்கு சென்று பாலியல் சேவையை வழங்கியுள்ளார். இதில், 35 வயது முதல் 80 வயது வரையிலான ஆண்கள் சேவையை பெற்றுள்ளனர். ஆனால், அதினாவுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.
இதுபற்றி வெளியான தகவலில், அதினா வாடிக்கையாளரின் வீட்டுக்கு காரில் செல்வார். அவரை இறக்கி விட்டு விட்டு, துமித்ரு காரிலேயே காத்திருப்பார். ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் தேவைப்படும் என துமித்ரு துப்பாக்கியுடன் காரில் இருப்பார்.
வீட்டுக்குள் செல்லும் அதினா, ஆண்களுக்கு விலையுயர்ந்த மதுபானம் ஊற்றி கொடுப்பார். அப்போது, அவர்களுக்கு போதை ஏற்படுவதற்காக சக்தி வாய்ந்த ஜி.பி.எல். எனப்படும் ரசாயன பொருளை கலந்து விடுவார். இதனால், அவர்கள் மயக்கத்திலேயே இருப்பார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் சுயநினைவை இழந்ததும், அதினா மற்றும் துமித்ரு இருவரும் சேர்ந்து, வீட்டில் உள்ள பணம், நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி விடுவர். ரோலக்ஸ் கடிகாரம், நகை, ஷேவிங் லோசன் உள்ளிட்டவற்றையும் கூட அவர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.
இதுவரை 4 பேர் இவர்களிடம் சிக்கியுள்ளனர். ஆனால், அவர்களில் 2 பேர் அந்த ரசாயனத்தின் வீரியத்தினால் உயிரிழந்து விட்டனர். அவர்களில் ஒருவர் ஆக்ஸ்போர்டுஷைர் பகுதியை சேர்ந்த, கேரி மவுவாத் (வயது 37). மற்றொருவர் கிளவுசெஸ்டர்ஷைர் பகுதியை சேர்ந்த மால்கல்ம் கிங் (வயது 80).
இவர்கள் தவிர 2 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் பிழைத்து விட்டனர். முதலில் கிங்கும், ஓராண்டுக்கு பின்னர் கேரியும் உயிரிழந்தனர். இந்த 2 வழக்குகளையும் சேர்த்து, மீதமுள்ள 2 பேரிடமும் விசாரித்ததில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தன. தொடர் விசாரணையில், இந்த வழக்குகளில் எல்லாம் வாடிக்கையாளர்களின் ஒயின் கிளாஸ்களில் அதினாவின் ரேகைகள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.
இதனால், அதினா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனடிப்படையில் விசாரித்ததில் 2 பேரும் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டிலும் வழக்கு நடந்தது. அதில், 2 பேருக்கும் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.