20 ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை... கணவர் உள்பட 13 பேர் மீது வழக்கு

28 முதல் 74 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

20 ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை... கணவர் உள்பட 13 பேர் மீது வழக்கு
Published on

லண்டன்

20 ஆண்டுகளாக மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்ட கணவர் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் வடக்கே மான்செஸ்டர் நகரில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. 60 வயதுடைய கணவர் ஒருவர், அவருடைய மனைவிக்கு 20 ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்.

வழக்கு விசாரணை

இதுதொடர்பாக, மான்செஸ்டரில் உள்ள மான்செஸ்டர் மின்ஷூல் ஸ்ட்ரீட் கிரவுன் கோர்ட்டில் வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில், 5 பாலியல் வன்கொடுமைகள், 3 பாலியல் கொடூர தாக்குதல்கள், 6 பாலியல் தாக்குதல்கள் மற்றும் மனைவியின் ஒப்புதல் இன்றி அவருடைய ஆபாச புகைப்படங்களை பகிர்தல் என அந்த நபருக்கு எதிராக 60 குற்றச்சாட்டுகள் உள்ளன.

தொடக்கத்தில் அவற்றை எல்லாம் மறுத்த அவர், பின்னர் கோர்ட்டில் குற்றச்சாட்டுகளை ஒப்பு கொண்டார். அவர் இதனை கூறும்போது, அவருடைய மனைவி கோர்ட்டு அறையில் இருந்துள்ளார்.

12 பேர்

இந்த விவகாரத்தில், கணவர் தவிர 12 பேருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. 28 முதல் 74 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பெண்ணுக்கு எதிராக அவர்களும் பாலியல் வன்கொடுமைகளை வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தியுள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் அனைவரும் மறுத்துள்ளனர். எனினும், அவர்களும் வழக்கை எதிர்கொள்ள உள்ளனர். இந்த வாரத்தில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

இதுபற்றி உதவி தலைமை காவலர் ரிக் ஜாக்சன் கூறும்போது, இது ஒரு மிக சிக்கலான விசாரணையாக உள்ளது. இந்த பயங்கர பாதிப்பில் சிக்கிய அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அவருக்கு தொடர்ந்து சிறப்பு ஆதரவு அளிக்கப்படும் என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com