இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார் - பெண் பத்திரிகையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார் - பெண் பத்திரிகையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

லண்டன்,

ஐரோப்பியா கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக் ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரசா மே கண்ட அதே சரிவை போரிஸ் ஜான்சனும் எதிர்கொண்டு வருகிறார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் அவர் நாடாளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இது அரசியல் ரீதியில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அண்மையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

போரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்த போது, அமெரிக்காவை சேர்ந்த பெண் தொழிலதிபரான ஜெனிபர் ஆர்குரி என்பவரிடம் பணத்தை பெற்று கொண்டு லண்டனில் உள்ள அவரது நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் போரிஸ் ஜான்சன் சட்டத்துக்கு உட்பட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஜெனிபர் ஆர்குரிக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறுகிறார்.

ஆனால் இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது போரிஸ் ஜான்சனுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது போரிஸ் ஜான்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வரும் சார்லோட் எட்வர்ட்ஸ் என்ற பெண்தான் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.

கடந்த 1999-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன், பிரபல பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியபோது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சார்லோட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விருந்து நிகழ்ச்சியின் போது எனது அருகில் அமர்ந்திருந்த போரிஸ் ஜான்சன் என் தொடையின் மீது கை வைத்து தகாத செயலில் ஈடுபட்டார் என கூறினார்.

இந்த குற்றச்சாட்டையும் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை கேவலமான பொய் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே சார்லோட் எட்வர்ட்ஸ் தனது டுவிட்டரில் பிரதமருக்கு நடந்த சம்பவம் நினைவில் இல்லையென்றால், அவருக்கு அதனை நான் நினைவுபடுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அவர் மீது அடுத்தடுத்து ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com