

அடிலெய்டு
ஆஸ்திரேலியாவில் 15 ஆண்டுகளாக வசித்து வருபவர் சுமித் சதீஷ் ரஸ்தோகி (வயது 39). டெல்லியை சேர்ந்த இந்திய வம்சாவளி நபரான இவர், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் அடிலெய்டு மேற்கு புறநகர் பகுதியில் கிளென்எல்க் என்ற இடத்தில் மசாஜ் தெரபிஸ்டாக பணி செய்து வருகிறார்.
அவர், மசாஜ் செய்கிறேன் என கூறி 61 பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். தவிர, அரை நிர்வாண கோலத்தில் இருக்கும்போது, தவறான முறையில் படம் பிடித்தும் இருக்கிறார். இதற்காக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது.
அவருக்கு எதிராக, 55 முறை தவறான படம் பிடித்தல் மற்றும் 42 முறை நாகரீகமற்ற முறையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இந்த குற்றங்களில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, தகுதி பெறாத மசாஜ் பணியாளராக இருந்திருக்கிறார்.
2022-ம் ஆண்டில் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அந்நபரால் வாழ்க்கையில் நம்பிக்கையையும் இழந்துள்ளனர். இதனை வழக்கு விசாரணையில் பலரும் தெரிவித்தனர்.
அதில் ஒரு பெண், தேன் நிலவு நடந்த சமயம் இந்த துன்புறுத்தல் நடந்தது என குறிப்பிட்டு உள்ளார். இதனால், டாக்டர்கள் உள்ளிட்ட எந்த ஆடவரையும் நம்ப முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டேன் என கூறியுள்ளார்.
சுமித்துக்கு, பெண் நீதிபதி கார்மென் மேத்யூ, 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதற்கு பின்னர், அவர் நாடு கடத்தப்படுவார்.