புளோரிடாவை தாக்கிய ஐயான் சூறாவளி வெள்ளநீரில் அடித்துவரப்பட்ட சுறா

இயான் சூறாவளியின் போது கடலில் இருந்து சுறா ஒன்று போர்ட் மியர்ஸ் பகுதி வெள்ள நீரில் சென்றது.
புளோரிடாவை தாக்கிய ஐயான் சூறாவளி வெள்ளநீரில் அடித்துவரப்பட்ட சுறா
Published on

புளோரிடா:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் நேற்று மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. சூறாவளி கரையை கடந்தபோது 4-ம் பிரிவில் அதிக ஆபத்து நிறைந்த சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது.

இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி இந்த சூறாவளி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்றது. அப்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல்களாக குறைந்து 1-ம் பிரிவில் வகைப்படுத்தப்பட்டது.

ஆர்லேண்டோ மற்றும் கேப் கேனவரெல் பகுதிக்கு இடையே சூறாவளி மையம் கொண்டுள்ளது. இன்று காலை மத்திய புளோரிடாவையும் பின்னர் மேற்கு அட்லாண்டிக் பகுதியையும் புயல் கடந்து செல்லும் என தேசிய சூறாவளி மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ஆரஞ்சு, பிரேவார்டு, செமினோல் மற்றும் வொலூசியா பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

இந்த சூறாவளி அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. இந்த சூறாவளி கரையை கடந்தபோது பதிவான மழை மற்றும் காற்றின் வேகத்தை பிரதிபலிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சில வீடியோ காட்சிகள் வலம் வருகின்றன.

இந்தச் சூறாவளி தரையை கடந்தபோது மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி உள்ளது. சுமார் 18 லட்சம் மக்கள் மின்சார வசதியின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கியூபாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 2 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் மின்சார வசதி பாதிப்பால் அவதியுற்றுள்ளனர்.

இயான் சூறாவளியின் போது கடலில் இருந்து சுறா ஒன்று போர்ட் மியர்ஸ் பகுதி வெள்ள நீரில் சென்றது.

புளோரிடாவே வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதனால் மருத்துவக் குழு மற்றும் 300 ஆம்பூலன்ஸ்களை அமெரிக்க அரசு அனுப்பியுள்ளது. மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மக்களுக்கு துணையாக தங்கள் அரசு இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com