ஷெபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி உலகம் முழுவதும் சுற்றுகிறார்; இம்ரான் கான் தாக்கு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி உலகம் முழுவதும் சுற்றுகிறார் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கி பேசியுள்ளார்.
ஷெபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி உலகம் முழுவதும் சுற்றுகிறார்; இம்ரான் கான் தாக்கு
Published on

கராச்சி,

பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக அந்நாடு கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்தநிலை, கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட பெருவெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடந்த ஆண்டு ஆகஸ்டு காலகட்டத்தில் அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரியது.

பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியம் தேவையான நிதியை விடுவிக்க உதவ வேண்டும் என அமெரிக்காவிடமும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று திரும்பினார். தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு சென்றார். சில அரசு சார்ந்த கூட்டங்களிலும் பங்கேற்றார். நிதி உதவி கோரி ஐக்கிய அரபு அமீரக பயணமும் மேற்கொண்டார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரசு பாகிஸ்தானுக்கு என்ன செய்கிறது என பாருங்கள்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி வெவ்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால், யாரும் அவருக்கு ஒரு பென்னி நாணயம் கூட வழங்கவில்லை என ஷெரீப்பின் சமீபத்திய வெளிநாட்டு பயணங்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ஷெரீப், இந்தியாவிடம் கூட பேச்சுவார்த்தைக்காக கெஞ்சி கொண்டு இருக்கிறார். ஆனால், முதலில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுங்கள் (அதன்பின் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை பற்றி பரிசீலனை செய்யலாம்) என புதுடெல்லி அவரிடம் கூறியுள்ளது என கான் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரக ஊடக நிறுவனத்திடம் அளித்த பேட்டியின்போது, பிரதமர் ஷெரீப், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கான தனது விருப்பங்களை வெளியிட்டார்.

இதுபற்றி இந்தியா தரப்பில் கூறும்போது, அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவையே எப்போதும் இந்தியா விரும்புகிறது. ஆனால், அதுபோன்ற உறவுக்கு, பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட சூழல் அந்நாட்டில் காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஷெரீப்பின் சமீபத்திய 2 நாள் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின்போது, தற்போதுள்ள 200 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை நீட்டிக்க அமீரகம் ஒப்புதல் அளித்ததுடன், கூடுதலாக 100 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை தருவதற்கும் ஒப்பு கொண்டது.

கடந்த கோடை காலத்தில் பருவகால பாதிப்புகளால் நாட்டை சூறையாடிய வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உதவியாக ஆயிரம் கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர் வழங்கப்படும் என, ஜெனீவா மாநாட்டின்போது சர்வதேச நாடுகள் உறுதி வழங்கியிருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com