

லாகூர்,
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியே காரணம் என்று குற்றம் சாட்டி எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (வயது 70) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து புதிய அமைச்சரவையை அமைக்கும் பணிகளில் அவர் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறார். இதன்படி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.என்) கட்சியின் 12 உறுப்பினர்கள் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி.) 7 உறுப்பினர்களை தன்னுடைய அமைச்சரவையில் சேர்க்க ஷபாஸ் ஷெரிப் முடிவு செய்துள்ளார்.
இதேபோன்று, சபாநாயகர் ஆசாத் கைசர் பதவி விலகும் முடிவை அறிவித்த சூழலில், அந்த பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உறுப்பினரான ராஜா பர்வேஷ் அஷ்ரப் வேட்பாளராக தேர்வாகி உள்ளார்.
துணை சபாநாயகர் காசிம் சூரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், அந்த பதவிக்கு ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-எப்பில் (ஜே.யு.ஐ.-எப்) இருந்து ஒருவர் துணை சபாநாயகராக தேர்வாக கூடும் என்று ஜியோ நியூஸ் தெரிவித்து உள்ளது.
ஜே.யு.ஐ.-எப் 3 மந்திரிகளையும் மற்றும் ஒரு இணை மந்திரி பதவியையும் பெற கூடும். முத்தஹிடா குவாமி இயக்கம்-பாகிஸ்தான் (எம்.கியூ.எம்.-பி.) கட்சியானது சிந்த் மாகாண கவர்னர் பதவியையும், பி.பி.பி. பஞ்சாப் மாகாண கவர்னர் பதவியையும், ஜே.யு.ஐ.-எப் கைபர் பக்துன்குவா மாகாண கவர்னர் பதவியையும், பி.என்.பி.-எம். பலூசிஸ்தான் மாகாண கவர்னர் பதவியையும் பெற கூடும் என்றும் ஜியோ நியூஸ் தெரிவித்து உள்ளது.