அமெரிக்காவில் இந்திய சிறுமி உயிரிழந்த வழக்கில் வளர்ப்பு தாயின் ஜாமீன் தொகை குறைப்பு

அமெரிக்காவில் இந்திய சிறுமி உயிரிழந்த வழக்கில் வளர்ப்பு தாயின் ஜாமீன் தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலராக குறைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் இந்திய சிறுமி உயிரிழந்த வழக்கில் வளர்ப்பு தாயின் ஜாமீன் தொகை குறைப்பு
Published on

ஹூஸ்டன்,

அமெரிக்காவில் வசித்து வரும் தம்பதி சீனி மேத்யூஸ் மற்றும் கணவர் வெஸ்லி மேத்யூஸ். சீனி இந்திய அமெரிக்கராவார். இவர்கள் பீகாரில் இருந்து சரஸ்வதி என்ற 3 வயது பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தனர். அதற்கு ஷெரீன் மேத்யூஸ் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், சிறுமி ஷெரீன் கடந்த அக்டோபர் 6ந்தேதி உயிரிழந்து உள்ளது.

ஆனால் சிறுமியை காணவில்லை என தம்பதி போலீசில் புகார் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து நடந்த தேடுதல் பணியில் டல்லாஸ் நகரின் கால்வாய் ஒன்றில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கடந்த மாதம் 22ந்தேதி வெஸ்லியை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து சீனி கைது செய்யப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில், சிறுமியை இரவில் தனியாக வீட்டில் விட்டு விட்டு தம்பதி ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். சிறுமி ஷெரீன் சமையலறையில் தனியாக இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. ஒன்றரை மணிநேரத்திற்கு பின் தம்பதி திரும்பி வந்துள்ளனர். அப்பொழுது சிறுமி உயிருடன் இருந்தாரா? என்பது போலீசார் விசாரணையில் முடிவாகவில்லை. ஆபத்து நிறைந்த சூழலில் குழந்தையை விட்டு சென்ற குற்றத்திற்காக சீனி சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை பிணையில் விடுவிக்க 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சீனியின் பிணை தொகையை ஒரு லட்சம் அமெரிக்க டாலராக குறைத்து நீதிபதி பர்கோ உத்தரவிட்டு உள்ளார். ஆனால் தொடர்ந்து சீனி வீட்டு காவலில் வைக்கப்படுவார் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஷெரீனின் மரணத்தினை அடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகத்தின் அனுமதி சான்றிதழ் வழங்கிய பின்பே தத்து குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை விவரங்களை தொடர்ந்து அளிக்கும்படி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தினை மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com