

மஸ்கட்,
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும், அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியுள்ளது. ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஹர்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் கப்பல்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஓமன் நாட்டின் மார்ஷல் தீவு அருகே அரபிக்கடலில் சரக்கு கப்பல் இன்று சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் 24 இந்திய மாலுமிகள் பயணித்தனர்.
அந்த சரக்கு கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து கப்பலில் பயணித்த மாலுமிகள் உதவிகோரி அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் இருந்த ஓமன் கடற்படையினர் விரைந்து சென்று 24 இந்திய மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.
இந்த தாக்குதலை அமெரிக்க கடற்படை நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.