பிரான்ஸ் மாடல் அழகியை திருமணம் செய்ய 500 கி.மீ. பயணித்த காதலருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சோபியை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் மைக்கேல் கூறியுள்ளார்.
பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாடல் அழகி சோபி வோஸ்லாட்(வயது 38). இவர் 2007-ம் ஆண்டு 'மிஸ் பிரான்ஸ்' அழகி போட்டியில் பங்கேற்று 2-வது இடத்தை பிடித்தார். பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு கொண்டவரான சோபி, பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று புகழ்பெற்ற மாடலாக திகழ்ந்து வருகிறார். 'தி பெர்பெக்ட் டேட்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சோபி தற்போது தனது கணவர் பேபியன் போடமினுடன் பாரிஸ் நகருக்கு தெற்கே உள்ள செயிண்ட் ஜூலியன் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9-ந்தேதி சோபியை தேடி அவரது வீட்டிற்கு மைக்கேல் என்ற நபர் வந்துள்ளார். பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரான மைக்கேல், சோபியை காண்பதற்காக சுமார் 500 கி.மீ. தூரம் பயணம் செய்து வந்ததாக கூறியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி சோபியை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் மைக்கேல் கூறியுள்ளார். ஆனால் சோபி, தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று கூறியபோது, மைக்கேலின் காதல் கோட்டை சுக்குநூறாக தகர்ந்து போனது.
முதலில் இதை நம்ப மறுத்த மைக்கேல், பின்னர் சோபியின் கணவர் பேபியனை பார்த்து பேசிய பிறகு, "நான் முட்டாளாக்கப்பட்டு விட்டேன்" என்று வேதனையுடன் கூறிச் சென்றார். இந்த உரையாடல் அனைத்தையும் சோபியின் கணவர் பேபியன் தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் அவர் பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோவில், மைக்கேல் பல வாரங்களாக சோபியுடன் வாட்ஸ் அப் செயலி மூலம் பேசி வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது அனுமதி பெற்ற பிறகே நேரில் வந்ததாகவும் கூறுகிறார். அதற்கு ஆதாரமாக சோபியுடன் பேசிய வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளையும் அவர் காட்டுகிறார். அதுமட்டுமின்றி, சோபிக்கு 35 ஆயிரம் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம்) பணம் அனுப்பியதாகவும் மைக்கேல் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ந்த சோபி, தான் அவ்வாறு யாரிடமும் பேசவில்லை எனவும், யாரோ மர்ம நபர்கள் தனது பெயரில் போலி கணக்கு தொடங்கி மைக்கேலை ஏமாற்றியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசிடம் புகார் அளிக்கும்படி மைக்கேலிடம் சோபியும், அவரது கணவரும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் மைக்கேல் இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிரான்ஸ் மாடல் அழகியை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் கிளம்பி வந்த மைக்கேல், மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்தது மட்டுமின்றி, காதலையும் இழந்து மனமுடைந்து வீடு திரும்பிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.






