

லண்டன்,
அம்ரிக் சிங் நாட்டிங்ஹாம்ஷயரில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு நண்பர்களுடன் மது அருந்த சென்று இருந்தார். அப்போது இவர் தனது சீக்கிய மத வழக்கப்படி தலைப்பாகை அணிந்து இருந்தார். அவரிடம் ஊழியர் ஒருவர் வந்து, இங்கே தலைப்பாகை அணிந்து வரக்கூடாது என கூறினார்.
அவரிடம் அம்ரிக் சிங், இது எனது தலைமுடியைப் பாதுகாக்கிறது. அது மட்டுமின்றி, இது எனது மத சம்பிரதாயம் எனக்கூறி விளக்கம் அளித்தார். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. அம்ரிக் சிங்கை அவரது நண்பர்களிடம் இருந்து பிரித்து வெளியேற்றினார். இது அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டது.
இது குறித்து அவர் தனது பேஸ் புக் பக்கத்தில் மிகுந்த வேதனை தெரிவித்து உள்ளார்.
மேலும், அம்ரிக் சிங் இதுபற்றி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எனது மத சம்பிரதாயத்தைப் பின்பற்றியதற்காக வெளியேற்றப்பட்டது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. எனது மூதாதையர் இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றியவர்கள். நானும், எனது பெற்றோரும் இங்கு பிறந்தவர்கள்தான். நாங்கள் இங்கிலாந்தை மதிப்பவர்கள் என கூறி உள்ளார்.
இதையடுத்து இரவு விடுதி நிர்வாகம், அம்ரிக் சிங்கிடம் மன்னிப்பு கேட்டது. அத்துடன் அந்த ஊழியரை பணி இடைநீக்கம் செய்து உள்ளது.