ஈரானில் ஹிஜாப் அணியாத பாடகிக்கு 74 கசையடி தண்டனை நிறைவேற்றம்

பாடகி பராஸ்டோ அஹமதிக்கு நேற்று 74 கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானில் ஹிஜாப் அணியாத பாடகிக்கு 74 கசையடி தண்டனை நிறைவேற்றம்
Published on: 

டெஹ்ரான்,

ஈரான் நாட்டில் பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கு ஒருபுறம் எதிர்ப்பு நிலவி வந்தாலும், சட்டத்தை மீறுவோருக்கு ஈரான் அரசு இஸ்லாமிய சட்டத்தின்படி கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது.

யூடியூப் வீடியோ

அந்த வகையில், ஈரான் நாட்டைச் சேர்ந்த பாடகி பராஸ்டோ அஹமதி(வயது 29) என்பவர், கடந்த 2024-ம் ஆண்டு தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஹிஜாப் அணியாமல், ஸ்லீவ்லெஸ்(Sleeveless) ஆடை அணிந்தபடி, ஈரான் நாட்டின் பாரம்பரிய பாடல் ஒன்றை அவர் பாடியிருந்தார். அந்த வீடியோவில் மேலும் 3 இசைக்கலைஞர்கள் இடம்பெற்றிருந்தனர்.

வழக்கு

பராஸ்டோ அஹமதி வெளியிட்ட வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஹிஜாப் அணியாமல் பாடல் பாடி வீடியோ வெளியிட்டதற்காக பராஸ்டோ அஹமதிக்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பராஸ்டோ அஹமதி மீது வழக்கு தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, இந்த கைது விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளான நிலையில், 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பராஸ்டோ அஹமதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் ஈரானில் ஏற்கனவே இதே போன்ற வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, பராஸ்டோ அஹமதிக்கும் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஈரான் நாட்டைச் சேர்ந்த சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

கசையடி தண்டனை

இதைத் தொடர்ந்து, ஈரான் கோர்ட்டில் பராஸ்டோ அஹமதிக்கு மீண்டும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு 74 கசையடிகள் கொடுக்க உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின்படி நேற்று பாடகி பராஸ்டோ அஹமதிக்கு 74 கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேலும் 3 இசைக்கலைஞர்களுக்கும் கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, அவர்கள் பயணம் செய்வதற்கும், கலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 2 ஆண்டுகள் தடை விதித்து ஈரான் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X