

கொழும்பு,
இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக ஒரு தகவல் வெளியானது அதில், - இந்தியா - இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ரா என்னை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்திய உளவு அமைப்பு மீது இலங்கை அதிபர் நேரடியாக குற்றச்சாட்டு சுமத்தும் வகையில் அவரது கருத்து அமைந்து இருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இலங்கை அரசு தரப்பில் மேற்கூறிய தகவலுக்கு மறுப்பு வெளியாகி இருக்கிறது.
இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறும் போது, இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை. ரா உளவாளி கைது செய்யப்பட்டதாக கூறி இரு நாடுகள் இடையே பிரச்சினை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக மட்டுமே கூறினார் என்று தெரிவித்துள்ளார்.