

வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் உள்ள முஸ்கோஜீ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக போலீசார் அந்த வீட்டில் சென்று பார்க்கும்போது ரத்த வெள்ளத்தில் நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்து கிடந்தனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு பெண் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. அதேபோல் உயிரிழந்தவர்களின் விவரத்தையும் போலீசார் வெளியிடவில்லை. விசாரணைக்கு பிறகு இது குறித்த முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.