அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி

அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போடும்போது, 4 மடங்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி
Published on

அஜர்பைஜானில் ஆய்வு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி, அஸ்ட்ரா ஜெனேகா. இது, உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து சிறப்பாக செயல்படக்கூடியது.இதுதான் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட்.இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளையும் 2 தவணைகளாக அடுத்தடுத்து போட்டால் எப்படி இருக்கும் என்பதை அறிய அஜர்பைஜான் நாட்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் இந்த ஆய்வு நடந்தது.

நோய் எதிர்ப்பு சக்தி

இதற்காக 100 தன்னார்வ தொண்டர்கள் பயன்படுத்தப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு தொடங்கியது. முதலில், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியும், 29 நாட்கள் கழித்து, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. இதில், முதலில் பங்கேற்ற 20 தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து ஆய்வு முடிவுகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வின் 57-வது நாளில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேருக்கு இவ்வளவு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது.

இதுபோல், ஐக்கிய அரபு அமீரகம், ரஷியா ஆகிய நாடுகளிலும் மேற்கண்ட 2 தடுப்பூசிகளை பயன்படுத்தி ஆய்வு நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com