அமீரகத்தில் இதுவரை 61 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

அமீரகத்தில் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமீரகத்தில் இதுவரை 61 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
Published on

அபுதாபி,

அமீரகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணியானது வேகமாக நடந்து வருகிறது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியானது அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறையின் ஒத்துழைப்புடன் நடந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு துபாய், சார்ஜா, அஜ்மான், அபுதாபி, உம் அல் குவைன், புஜேரா, ராசல் கைமா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மையங்களுக்கு நேரடியாக வர முடியாத முதியவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அமீரக தலைவர்களின் வழிகாட்டுதலின்படி சமூகத்தில் முதியவர்களது நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தடுப்பூசி போடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுமக்களும் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

தங்களது வீடுகளில் இருக்கும் வயதானவர்களை தடுப்பூசி போடும் மையத்துக்கு அழைத்து வருவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இதன் மூலம் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவதில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

அமீரகத்தில் இதுவரை 61 லட்சம் பேருக்கு தடுப்பூசியானது போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81 ஆயிரத்து 790 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 பேருக்கு 60.82 என்ற விகிதத்தில் தடுப்பூசி போடும் பணி இருந்து வருகிறது.

தொடர்ந்து தடுப்பூசி போட வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி இளைஞர்களும் பதிவு செய்து வருகின்றனர். படிப்படியாக இந்த தடுப்பூசி அனைவருக்கும் போடப்படும். இதனை கருத்தில் கொண்டு தடுப்பூசியானது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி போடப்பட்ட வயதானவர்கள் சுகாதார நிலையத்தின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com