சோமாலியாவில் தீவிரவாத தாக்குதல்; பத்திரிகையாளர்கள் உள்பட 10 பேர் பலி

சோமாலியாவில் தீவிரவாத தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.
சோமாலியாவில் தீவிரவாத தாக்குதல்; பத்திரிகையாளர்கள் உள்பட 10 பேர் பலி
Published on

மொகதிசு,

சோமாலியா நாட்டின் கிஸ்மேயோ என்ற துறைமுக நகரில் அசாசே என்ற ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், துப்பாக்கிகளுடன் வந்த தீவிரவாதிகள் சிலர் கார் வெடிகுண்டு ஒன்றை முதலில் வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்பின் ஓட்டலுக்குள் புகுந்தனர்.

அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து பதிலடி கொடுத்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த தீவிரவாத தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு சோமாலியா நாட்டின் அல் ஷபாப் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்று கொண்டது. கனடா நாட்டை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான ஹோடன் நலாயே மற்றும் அவரது கணவர் பரித் ஜமா சுலைமான் ஆகிய இருவரும் தாக்குதலில் பலியாகி உள்ளனர்.

சோமாலியாவில் கடந்த 1976ம் ஆண்டு பிறந்த நலாயே, பின்னர் கனடா நாட்டில் வளர்ந்துள்ளார். உலகம் முழுவதுமுள்ள சோமாலிய பார்வையாளர்களுக்காக வலைதள அடிப்படையிலான சர்வதேச வீடியோ தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அவர் உலகின் முதல் சோமாலிய ஊடக பெண் உரிமையாளர் என்ற பெருமையை பெற்றவர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com