

நியூயார்க்,
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான உறவு தற்போது “மிகச் சிறப்பாக” உள்ளதாக நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போது இந்தியாவுடன் நட்புடன் சார்ந்த அணுகுமுறையை நேபாளம் கடைப்பிடித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஆசியா சொசைட்டி நிகழ்ச்சியில் பேசிய ஷிஷிர் கனால், இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கரை சமீபத்தில் சந்தித்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா-நேபாளம் இடையேயான உறவு பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது என்றும், நேபாளத்தின் மொத்த வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுடனான வர்த்தகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா-நேபாளம் இடையேயான கலாசார மற்றும் சமூக உறவுகள் மிகவும் வலுவாக இருப்பதாகக் கூறிய கனால், அரசியல் ரீதியாக சில நேரங்களில் உறவில் கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கம் என்றார்.
அதேநேரத்தில், “தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகச் சிறப்பாக உள்ளது” என்று அவர் கூறினார்.
இந்தியா மற்றும் சீனா இடையேயான புவிசார் அரசியலை நேபாளம் எவ்வாறு கையாள்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த கனால், அண்டை நாடுகளுடனான உறவுகளை கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் அணுகுவதைவிட, நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவதாக கூறினார்.
எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில சவால்கள் அண்டை நாடுகளுடன் இருப்பது இயல்பானது என்று கூறிய அவர், “சவால்கள் எங்கே உள்ளன என்பதை விட, வாய்ப்புகள் எங்கே உள்ளன என்பதில் தற்போது கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
நேபாளத்தின் பொருளாதாரம் இறக்குமதியை அதிகம் சார்ந்திருப்பதால், இந்தியாவுடனான எரிசக்தி வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கனால் தெரிவித்தார்.
நேபாளத்தின் ஆறுகளில் பொருளாதார ரீதியாக பயன்படுத்தக்கூடிய சுமார் 43 ஜிகாவாட் நீர்மின் திறன் இருப்பதாகவும், 2035-ம் ஆண்டுக்குள் 28,000 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் இந்தியாவுக்கும், தொடர்ந்து வங்காளதேசத்துக்கும் தூய்மையான மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுடன் 1,700 கிலோமீட்டருக்கும் அதிகமான திறந்த எல்லையை நேபாளம் கொண்டுள்ளது. உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய 5 இந்திய மாநிலங்களுடன் நேபாளம் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இந்தியாவுடனான நெருக்கத்தை உற்பத்தி மற்றும் வர்த்தக வாய்ப்புகளாக மாற்றுவதில் நேபாளம் கவனம் செலுத்தி வருவதாக கனால் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுடனான உறவிலும் நடைமுறை மற்றும் வர்த்தக அடிப்படையிலான அணுகுமுறையே தொடரும். வடக்கு மற்றும் தெற்கு வழித்தடங்களை போட்டியிடும் திசைகளாக பார்க்கவில்லை என்றும், இந்தியா மற்றும் சீனா என உலகின் மிகப்பெரிய சந்தைகளுடன் இணைக்கப்பட்ட “நிலத்தால் இணைக்கப்பட்ட பொருளாதாரமாக” நேபாளத்தை மாற்றுவதே நோக்கம் என்றும் ஷிஷிர் கனால் தெரிவித்தார்.