

கொழும்பு,
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சே ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகுமாறு யோஷித ராஜபக்சேவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது.இந்த சம்மனை ஏற்று யோஷித ராஜபக்சே விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து, விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்சேவின் மூன்று மகன்களில் இரண்டாவது மகனான யோஷித, முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரி ஆவார். ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ”2006-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யாமல் யோஷித ராஜபக்சே இலங்கை கடற்படையின் நிர்வாகப் பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி நடைமுறைகளை பின்பற்றாமல், அரசின் நிதியை பயன்படுத்தி பிரிட்டனில் உள்ள ராயல் நேவல் கல்லூரியில் பயிற்சி பெற அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது’.
ஏற்கனவே 2025-ம் ஆண்டு தனது பெரியம்மாவின் பெயரில் சொத்து வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் அவர் பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு வருகிறார்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். ஈஸ்டர் நாளில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் இலங்கையை உலுக்கியது. இது தொடர்பான வழக்கு தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் , தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபரும் யோஷிதேவின் சித்தப்பாவுமான கோத்தபய ராஜக்பசே கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தாக்கல் செய்த மறுநாளே ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர் கைதாகியிருப்பது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.