டெல்டா வைரசை விட ஒமைக்ரான் லேசான அறிகுறிகளையே கொண்டிருக்கிறது: தென் ஆப்பிரிக்க டாக்டர்கள்

டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் லேசான அறிகுறிகளையே கொண்டிருக்கிறது, 14 நாளில் வீட்டிலேயே குணம் அடைந்து விடலாம் என தென் ஆப்பிரிக்க டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா வைரசை விட ஒமைக்ரான் லேசான அறிகுறிகளையே கொண்டிருக்கிறது: தென் ஆப்பிரிக்க டாக்டர்கள்
Published on

ஒமைக்ரான் வைரஸ்

உரு மாறிய கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி கண்டறியப்பட்டபோது, அது 50 உருமாற்றங்களை கொண்டிருப்பதால் அதிவேகமாக பரவலாம், ஆபத்தானதாக இருக்கலாம் என கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தி இந்த வைரஸ் கவலைக்குரிய திரிபு என அறிவித்தது. இதனால் உலக நாடுகள் எல்லாம் ஒமைக்ரான் என்ற பெயரைக் கேட்டாலே அதிர்ந்து போகின்றன.

உண்மை அதுவல்ல...

ஆனால் உண்மை அதுவல்ல என்பது போல தென் ஆப்பிரிக்க டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள கவுடெங் மாகாணம்தான் அந்த நாட்டின் மக்கள் தொகை மிகுந்த மாகாணம் ஆகும். அங்கு 1 கோடியே 60 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்குதான் முக்கிய நகரங்களான ஜோகன்னஸ்பர்க், நிர்வாக தலைநகர் பிரிட்டோரியா போன்றவை உள்ளன. இந்த மாகாணத்தில் மருத்துவம் செய்து வருபவர், டாக்டர் உன்பென் பிள்ளை.

டிசம்பர் முதல் வாரத்தில் இந்த மாகாணத்தில் புதிய தொற்று பாதிப்பு 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அவற்றில் 90 சதவீதம் ஒமைக்ரான் பாதிப்புதான் என தெரிய வந்துள்ளது.

லேசான அறிகுறிகள்தான்...

ஆனாலும் இதுபற்றி டாக்டர் உன்பென் பிள்ளை கூறும்போது, கடந்த டெல்டா அலையின்போது, மக்கள் தொற்று பாதிப்புக்கு ஆளானபோது சுவாச பிரச்சினையாலும், ஆக்சிஜன் அளவு குறைந்து போதல் பிரச்சினையாலும் அவதிப்பட்டனர். அவர்களில் பலரும் ஒன்றிரண்டு நாளில் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது ஆனால் இப்போது நான் சிகிச்சை அளிக்கிற ஒமைக்ரான் தொற்று நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள், குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, இருமல் போன்ற அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, டெல்டா வைரசை விட லேசான அறிகுறிகளையே கொண்டிருப்பதால், ஒமைக்ரான் பாதித்தவர்கள் வீட்டிலேயே தங்களை நிர்வகித்துக்கொள்ள முடிகிறது. பெரும்பாலோர் 10 முதல் 14 நாளில் குணம் அடைந்து விடுகின்றனர். உடல் நல பிரச்சினை உள்ளவர்களும், வயதானவர்களும் இதில் விதிவிலக்கு கிடையாது என குறிப்பிட்டார்.

பாதிப்பு அதிகரிப்பு....

இவர் அங்கு 5 ஆயிரம் பொது மருத்துவர்களை கொண்ட சங்கத்தின் இயக்குனராகவும் உள்ளார். அவரது சக டாக்டர்களும் இதே போன்ற கருத்துக்களையே தெரிவித்துள்ளனர்.

நெட்கேர் என்ற மிகப்பெரிய தனியார் சுகாதார சேவை நிறுவனம், லேசான பாதிப்புகளை கொண்ட நோயாளிகளையே கண்டு வருவதாக தெரிவித்தது.

ஆனால் தென் ஆப்பிரிக்காவில் தொற்று பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமையன்று 22 ஆயிரத்து 400 பேரும், வெள்ளிக்கிழமையன்று 19 ஆயிரம் பேரும் பாதிப்புக்குள்ளானார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன் தினசரி சராசரியாக 200 பேர்தான் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.

அதிகரிக்க காரணம் ஒமைக்ரான்...

இது பற்றி அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஜோ பாஹலா கூறும்போது, இந்த அளவு தொற்று பரவல் அதிகரிக்க காரணம், ஒமைக்ரான்தான். நாடு முழுவதும் புதிதாக பாதிப்புக்குள்ளாவோரில் 70 சதவீதம் பேர் ஒமைக்ரான் வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர்தான். தற்போது கொரோனா வைரஸ் பரவல் விகிதம் 1-க்கு 2.5 என்ற அளவில் உள்ளது. அதாவது ஒருவர் 2.5 பேருக்கு பரப்புகிற நிலை உள்ளது. இதுதான் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா காலத்தில் அதிகபட்ச பாதிப்பு விகிதம் ஆகும் என தெரிவித்தார்.

இது பற்றி தேசிய தொற்றுநோய்கள் நிறுவனத்தை சேர்ந்த வாசிலா ஜாசட் கூறுகையில், ஏனென்றால் ஒமைக்ரான் அப்படியொரு பரவக்கூடிய வைரஸ் என்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று அதிகரிப்புகளை நாங்கள் பார்க்கிறோம் என தெரிவித்தார்.

இந்த ஒமைக்ரான் அலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவோரில் 86 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவோரைப் பொறுத்தமட்டில் இதுவரை எந்த அலையிலும் இல்லாத வகையில் மூன்றில் இரு பங்கினர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தானாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com