

சியோல்,
சீனாவில் இருந்து கொரோனா பரவ தொடங்கியபோது முதலாவதாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று. 2020-ம் ஆண்டின் ஜனவரி மாத பிற்பகுதியில் அங்கு வைரஸ் பரவ தொடங்கியது. அதே சமயம் கட்டாய முக கவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடித்ததன் மூலமாக வைரஸ் பரவலை அந்த நாடு வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தது.
அதுமட்டும் இன்றி கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பலவும் முக்கிய நிகழ்வுகளை ஒத்திவைத்த நிலையில், தென்கொரியா 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் தென்கொரியாவில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையில், திட்டமிட்டபடி அதிபர் தேர்தலை நடத்தி முடிக்க ஆயத்தமாகி வருகிறது அந்த நாட்டு அரசு.
அந்த வகையில் வருகிற 9-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை நேற்று தொடங்கியது. இந்த வாக்கு பதிவு இன்றும் நடக்கிறது.
முன்கூட்டியே வாக்குப்பதிவுக்காக நாடு முழுவதும் 3,500-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடித்து வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடப்பதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 838 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.