

சியோல்,
உக்ரைனில் போர் காரணமாக மூடப்பட்ட தென் கொரிய தூதரகம் உக்ரைனின் கீவ் நகரத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கான தென் கொரிய தூதர் மற்றும் தூதரக ஊழியர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் கீவ் திரும்பியுள்ளனர் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போர் காரணமாக தென் கொரியா கடந்த பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில், கீவ் நகரத்தில் இருந்து தூதரகத்தை காலி செய்தது. மேலும், உக்ரேனில் உள்ள நகரங்களான லிவிவ் மற்றும் செர்னிவ்சியில் இரண்டு தற்காலிக தொடர்பு அலுவலகங்களையும், அண்டை நாடான ரோமானியாவில் ஒன்றையும் தென் கொரியா நிறுவியது.
இந்நிலையில், நேற்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் கொரியா உக்ரைனில் உள்ள தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய அரசாங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பை விரும்புகிறது. உக்ரைனுக்கான தென் கொரிய தூதர் மற்றும் தூதரக ஊழியர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் கீவ் திரும்பியுள்ளனர்.
தூதரகத்தின் மற்ற ஊழியர்கள் இன்னும் செர்னிவ்சி மற்றும் ருமேனியாவில் உள்ளனர். மேலும் நிலைமையைப் பொறுத்து, அவர்கள் படிப்படியாக கீவுக்கு திரும்புவார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.