

கேப் கெனாவெரல்,
விண்வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்கள் சென்று அங்கு பணி செய்து வருவது வழக்கமான நடைமுறை ஆகும். அதே போல, விண்வெளி வீரர்களான டாம் மார்ஷ்பர்ன் மற்றும் கய்லா பாரோன் ஆகியோர் அங்கு பாதிப்புக்கு உள்ளான ஆண்டெனாவை சரிசெய்வதற்காக புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்வெளியில் அச்சுறுத்தும் வகையில் தேங்கியிருக்கும் விண்வெளி குப்பைகளால் விண்வெளி வீரர்களின் உடையில் துளை ஏற்படும் ஆபத்து உள்ளது.அந்த குப்பைகளால் விண்வெளி வீரர்கள் நடந்து செல்ல தாமதம் ஆகிறது என நாசா தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, விண்வெளியில் நடக்கும் திட்டத்தை நாசா நிறுத்தி வைத்துள்ளது. விண்வெளியில் சுற்றும் குப்பைகள் நேற்றிரவு விண்வெளி மையத்துக்கு மிக நெருக்கமாக வந்ததன் காரணமாக அவர்கள் புறப்படவில்லை. சில நாட்களுக்கு அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச விண்வெளி மையத்துக்கும் இதனால் ஆபத்து ஏற்படலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி குப்பைகளால் விண்வெளி பயணம் கைவிடப்பட்டுள்ளது உலக வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
நாசா நேற்று தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், ரஷியா இரண்டு வாரங்களுக்கு முன்னர் விண்வெளியில் ஒரு செயற்கோளை தகர்த்தது. அந்த செயற்கைகோளின் பாகங்கள் தான் இப்போது குப்பைகளாக சுற்றிக் கொண்டிருக்கின்றனவா என்பது குறித்து சரியான தகவல் தெரியவில்லை. 1700 பெரிய துண்டுகளாக அந்த செயற்கைக்கோள் சிதறி உள்ளது எனவும், கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான சிறிய துண்டுகளாகவும் வெடித்து சிதறி உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி வீரர்களின் கவச உடையை உடைக்கும் திறன் இந்த துண்டுகளுக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.