வானிலை 90 சதவீதம் சாதகம்; ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று மதியம் பயணம்


வானிலை 90 சதவீதம் சாதகம்; ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று மதியம் பயணம்
x
தினத்தந்தி 25 Jun 2025 7:37 AM IST (Updated: 25 Jun 2025 8:01 AM IST)
t-max-icont-min-icon

வானிலை, ஆக்சிஜன் கசிவு போன்றவற்றால் 6 முறை விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

நியூயார்க்,

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, ஆக்சியம்-4 என்ற பெயரிலான திட்டத்தின்படி ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் உதவியுடன் விண்வெளி வீரர்கள் 4 பேர் அடங்கிய குழு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான, ஆக்சியமின் மனித விண்கல பயண திட்ட இயக்குநர் பெக்கி விட்சன் என்பவர் தலைமையிலான குழுவினர் பயணம் மேற்கொள்கின்றனர்.

அவர் திட்ட தலைவராக செயல்படுகிறார். அவருடைய உத்தரவின்படி, இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, போலந்து நாட்டை சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் அங்கேரி நாட்டை சேர்ந்த திபோர் கபு ஆகிய மூவரும் செயல்படுவார்கள்.

இவர்கள் 3 பேரும் அவர்களுடைய நாட்டில் இருந்து முதன்முறையாக செல்லும் விண்வெளி வீரர்கள் ஆவர். ஆனால், திட்டமிட்டபடி இந்த திட்டம் செயல்படுத்த இயலவில்லை. வானிலை, ஆக்சிஜன் கசிவு போன்றவற்றால் 6 முறை விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

கடைசியாக, கடந்த 22-ந்தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என நாசா தெரிவித்தது. இந்த சூழலில், இன்று வானிலை 90 சதவீதம் சாதக நிலையில் உள்ளது என தெரிய வந்துள்ளது. இதனால், விண்வெளி பயணம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்த நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்திய நேரத்தின்படி, இன்று மதியம் 12.01 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணிற்கு புறப்பட்டு செல்கிறது.

1 More update

Next Story