ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்; வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு

கூகுள் மேப்பில், மெக்சிகோ வளைகுடா என்பதற்கு பதிலாக அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்; வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு
Published on

மெக்சிகோ சிட்டி,

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், செவ்வாய் கோளில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவருடைய ஸ்பேஸ்எக்ஸ் என்ற வர்த்தக விண்கல நிறுவனத்தின் உதவியுடன் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு ஏவி சோதனை செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 403 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் விண்கலம் கடந்த மே மாத இறுதியில் ஏவப்பட்டது. எனினும், விண்ணில் ஏவப்பட்ட 30 நிமிடங்களில் அந்த விண்கலம் வெடித்து சிதறியது.

கட்டுப்பாட்டை இழந்த விண்கலம் மீண்டும் வளிமண்டலத்திற்குள் திரும்பி வந்துள்ளது. எனினும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அதனை பாதுகாப்பாக திரும்பி வரவழைத்து கொள்ள முடியாமல் போனது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யும் நோக்கில் எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த பரிசோதனை தோல்வியில் முடிந்தது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையருகே இந்த விண்கலம் வெடித்து விழுந்தது. இதில், மெக்சிகோவின் தமவுலிபாஸ் மாகாணத்திலும் அதன் பாகங்கள் விழுந்துள்ளன.

இந்த சூழலில், மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷீன்பாம், உண்மையில் குப்பைகள் சேர்ந்துள்ளன. தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு ஏற்ப, எந்த வகையிலான சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டு உள்ளன என பரிசீலனை செய்யப்படும் என்றார்.

ராக்கெட் கழிவுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஒரு விரிவான மறுஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறினார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினர், ராக்கெட் கழிவுகள் பற்றி அவ்வப்போது கவலை தெரிவித்து வருகின்றனர். என்றபோதும், அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம், ஆண்டுக்கு விண்ணில் அனுப்பும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் எண்ணிக்கையை 5-ல் இருந்து 25 ஆக உயர்த்தி கொள்ள கடந்த மே 25-ல் ஒப்புதல் அளித்தது.

இந்த விரிவாக்க ஒப்புதலால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்து இருந்தது.

சமீபத்தில், கூகுள் மேப்பில், மெக்சிகோ வளைகுடா என்பதற்கு பதிலாக அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிரம்பின் உத்தரவின்பேரில் இது நடந்தது என கூறப்படுகிறது. இதற்கு எதிராக ஷீன்பாம் அரசு வழக்கு பதிவு செய்தது. இந்த சூழலில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளது. இதனால், அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான மெக்சிகோவின் நடவடிக்கையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com