

வாஷிங்டன்,
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருவதோடு, ராக்கெட் மூலம் விண்கலங்களில் விண்ணில் செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், பூமியில் இருந்து விண்கலங்களையும், மனிதர்களையும் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்குக் கொண்டு செல்வதற்காக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதுதான் ‘ஸ்டார்ஷிப்’(Starship) ராக்கெட். பொதுவாக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும்போது, எரிபொருளை சுமந்து செல்லும் பூஸ்டர்கள், அதன் பணி முடிந்ததும் தனியாக பிரிந்து கடலில் விழுந்துவிடும்.
ஆனால் ‘ஸ்டார்ஷிப்’ என்பது முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் ஆகும். அதன் பாகங்கள் மீண்டும் பூமிக்கு, ஆதாவது ராக்கெட் ஏவப்பட்ட தளத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்துவிடும். ஒருவேளை இதில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், ராக்கெட் பாகங்கள் கடலில் விழும் வகையில் திசைதிருப்பப்பட்டுவிடும். ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் ஏற்கனவே இது போல் 14 முறை ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட்டுகளை ஏவியுள்ளது.
இந்த நிலையில், 15-வது ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் நேற்று 26 ‘ஸ்டார்லிங்க் வி3’ செயற்கைக்கோள்களுடன் டெக்சாஸ் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் பாய்ந்த பிறகு அதில் இருந்து பிரிந்த ‘சூப்பர் ஹெவி பூஸ்டர்’ மீண்டும் ஏவுதளத்திற்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த பூஸ்டர் கடலில் இறக்கப்பட்டது.
இதனிடையே, விண்ணில் ஏவப்பட்ட 26 ‘ஸ்டார்லிங்க் வி3’ செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒலியை விட 23 மடங்கு வேகத்தில்(மணிக்கு சுமார் 28,000 கி.மீ.) பூமியை 14 முறை சுற்றி வரத் தொடங்கியுள்ள இந்த விண்கலம், நாளை(15-ந்தேதி) அதிகாலை ஏவுதளத்திற்கு மீண்டும் திரும்பி வர உள்ளது. ஏவுதளத்தில் உள்ள இயந்திரக் கைகள்(Mechanichal Arms) அந்த விண்கலத்தை பிடித்து நிறுத்த உள்ளது. இதனை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான பணிகளை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.