அமெரிக்க அதிபருக்கான சிறப்பு பருவநிலை தூதர் கெர்ரி இந்தியாவில் இன்று முதல் 5 நாள் சுற்றுப்பயணம்

அமெரிக்காவின் அதிபருக்கான சிறப்பு பருவநிலை தூதர் ஜான் கெர்ரி இந்தியாவில் இன்று முதல் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபருக்கான சிறப்பு பருவநிலை தூதர் கெர்ரி இந்தியாவில் இன்று முதல் 5 நாள் சுற்றுப்பயணம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அதிபருக்கான சிறப்பு பருவநிலை தூதராக இருப்பவர் ஜான் கெர்ரி. அவர் இந்தியாவில் இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில் அவர் டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். டெல்லியில் அரசின் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், பருவநிலை மற்றும் தூய எரிசக்தி பற்றிய கருத்துரைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவரது பயணம் அமையும்.

அவற்றில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சேமிப்புக்கான தீர்வுகளை காண்பதில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான தளம் ஒன்றை கட்டமைக்க பரஸ்பர முயற்சிகளை மேற்கொள்வது, பூஜ்ய பசுமை வாயு வெளியேற்ற பேருந்துகளை உபயோகிப்பதற்கான ஆதரவு மற்றும் தூய எரிசக்தி விநியோக சங்கிலியை பரவலாக்குவது உள்ளிட்ட விசயங்கள் பற்றி பகிரப்படும் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, சென்னையில் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள ஜி-20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைக்கான நீடித்த மந்திரிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்க இருக்கிறார்.

சமீபத்தில், கோவாவில் நடந்து வரும் ஜி20 எரிசக்தி மந்திரிகளுக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொலி காட்சி வழியே பேசும்போது, நாம் பெரியதொரு இலக்கை வைத்திருக்கிறோம்.

இதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் புதைபடிவமில்லாத எரிசக்தி சாதனங்களை 50 சதவீதம் என்ற அளவில் நிறுவுவது என்ற சாதனையை படைக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

சூரிய மற்றும் காற்று எரிசக்தியை பயன்படுத்தும் சர்வதேச நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com