

கொழும்பு,
கடந்த 1983-ம் ஆண்டு, தமிழர்களுக்கு எதிராக நடந்த இலங்கை இனக்கலவரத்தை ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.
இலங்கையில், கடந்த 1983-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் வெடித்தது. ஜூலை 30-ந் தேதிவரை இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் பலியானார்கள். இந்த சம்பவம், 'கருப்பு ஜூலை' என்று அழைக்கப்படுகிறது. இக்கலவரம் தமிழ்நாட்டிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலவரத்தைத் தொடர்ந்து, ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில், 1983-ம் ஆண்டு இலங்கை இனக்கலவரம் குறித்து ஆராய நாடாளுமன்ற தேர்வுக்குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது. இதை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னா தெரிவித்தார்.
பெண்கள் விவகாரத்துறை மந்திரி சாவித்ரி பால்ராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், 2 தமிழ் எம்.பி.க்களும் இடம் பெற்றுள்ளனர்.
இனக்கலவரத்தின் பாதிப்பை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளை குழு பரிந்துரைக்கும் என்று ஜகத் விக்ரமரத்னா கூறினார்.
தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அக்குழு நாடாளுமன்றத்துக்கு தனது பரிந்து ரைகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.