இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும்; மத்திய வங்கியின் புதிய கவர்னர்

மத்திய வங்கியை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளித்து மீண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Image Source: ANI
Image Source: ANI
Published on

கொழும்பு,

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட நந்தலால் வீரசிங்கே, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

மத்திய வங்கியை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளித்து நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான வழிகளில் ஒன்று, மத்திய வங்கியை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதாகும்.நாட்டின் பொருளாதார நெருக்கடியை என்னால் தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளேன்.

மத்திய வங்கியை சுயாதீனமாக நடத்தும் அதிகாரத்தை அதிபர் எனக்கு அளித்துள்ளார். இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சா கேட்டுக் கொண்டார்.

எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடிய ஒரு சுயாதீன நிறுவனமாக மத்திய வங்கியை பேணுவதே எனது நோக்கமாகும். கொள்கை வட்டி விகிதத்தை 7 சதவீதம் மேலும் அதிகரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கையில் இவ்வளவு அதிக விகிதத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நெருக்கடி நிலைமையை நிவர்த்தி செய்ய தேவையான மற்றும் போதுமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துள்ளோம். சந்தை நம்பிக்கையில் சில ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கிறேன். திங்கட்கிழமை சந்தை திறந்தவுடன் சந்தைகளில் இருந்து நேர்மறையான எதிர்வினையை எதிர்நோக்கி உள்ளோம்.

நாங்கள் வெளிப்படையாகவும், உண்மையாகவும் இருப்போம். மேலும் வங்கிகளின் முழு ஆதரவும் எங்களுக்குத் தேவை.

இந்த வாகனம் விபத்துக்குள்ளாகும் முன் அதற்கு பிரேக் போட வேண்டும். இலங்கையில் விஷயங்கள் பெரும் சவாலாக உள்ளன. நாங்கள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ஏப்ரல் 11ம் தேதியன்று சர்வதேச நாணய நிதியத்துடன் காணொலி வாயிலாக அவர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும், நம்பகமான ஒருங்கிணைந்த உத்தியை செயல்படுத்த வேண்டும்.

மேலும், வலுப்படுத்தப்பட்ட, தீர்க்கமான இலக்குகளை முன்வைத்து கொண்டு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், வறுமையைக் குறைத்தல் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை அடைய முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com