

கொழும்பு,
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
அந்தவகையில் இலங்கையும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளது. பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக தேயிலையை நன்கொடையாக அளித்து உள்ளது. கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதர் உமர் பரூக் பர்கியிடம் இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரி இந்த தேயிலையை ஒப்படைத்தார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், இலங்கையின் இந்த மனிதாபிமான நடவடிக்கை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.