எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இலங்கை நாடாளுமன்ற அலுவல் நாட்கள் குறைப்பு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை நாடாளுமன்றம் இந்த வாரம் 3 நாள் மட்டும் செயல்பட உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாங்க முடியவில்லை. இதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் இலங்கை மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது.

அதை தவிர்க்க பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவசியம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களை இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இன்னும் பல எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருகிறது.

இந்தநிலையில், எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையால், இலங்கை நாடாளுமன்றத்தின் அலுவல் நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த வாரம், 3 நாட்கள் மட்டும் நாடாளுமன்றம் செயல்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

வருகிற 6-ந் தேதி, அத்தியாவசிய பொது சேவைகள் சட்டம், விவாதமின்றி நிறைவேற்றப்படுகிறது. அதே நாளில், தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஆகஸ்டு மாதம்வரை, ஏற்கனவே திட்டமிடப்பட்ட எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை ரூ.885 கோடி செலுத்த வேண்டி இருப்பதாக இலங்கை மின்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) முதல் பல்வேறு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அந்த பணத்தை தர வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தநிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், இலங்கையில் பள்ளிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

அரசு பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஆகியவற்றுக்கு இந்த விடுமுறை பொருந்தும். இதனால் வீணாகும் பள்ளி நேரம், அடுத்த கோடை விடுமுறை காலத்தில் ஈடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com