அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை

மார்ச் 4 -ம் தேதி இந்தியாவில் பயிற்சி முடித்து புறப்பட்ட ஐரிஸ் டெனா என்கிற ஈரானின் போர்க் கப்பலை அமெரிக்கா தாக்கியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை
Published on

கொழும்பு

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் இன்று 21-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகள் மீதும் ஆவேச பதி லடியை கொடுத்து வருகிறது.

சர்வதேச சமூகத்தை உலுக்கி வரும் இந்த போர், தற்போது அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. அதாவது இரு தரப்பும் எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனங்களை குறிவைத்து தாக்க தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், கடந்த மார்ச் 4 அன்று இந்தியாவில் பயிற்சி முடித்து புறப்பட்ட ஐரிஸ் டெனா என்கிற ஈரானின் போர்க் கப்பலை இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் எல்லைக்கு அப்பால் அமெரிக்கா தாக்கியதால் ஈரான் மாலுமிகள் 84 பேர் பலியாகினர். இலங்கை கடற்படையினரின் உதவியால் 32 பேர் மீட்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மறுநாளே ஈரானின் ஐரிஸ் புஷேர் எனப்படும் மற்றொரு கப்பல் 225 பணியாளர்களின் பாதுகாப்பு காரணமாக இலங்கை எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் தற்போது வரை கொழும்புவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்கா தனது போர் விமானங்களை நிறுத்த அனுமதி கோரிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயக, அமெரிக்கா கப்பல்களைத் தாக்கும் 8 ஏவுகணைகள் கொண்ட இரு போர் விமானங்களை மட்டாலா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மார்ச் 4 முதல் 8 வரை நிறுத்த அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு நாம் மறுப்பு தெரிவித்தோம்.

அதே சமயத்தில் ஈரானும் மார்ச் 9 முதல் 13 வரை தங்களது 3 போர்க் கப்பல்களை நிறுத்த அனுமதி கேட்டனர். அவர்களின் கோரிக்கை தற்போது வரை ஏற்கப்படவில்லை.

நாம் ஈரானுக்கு 'ஆம்' என்று சொன்னால், அமெரிக்காவுக்கும் 'ஆம்' என்று சொல்ல வேண்டியதாக இருந்திருக்கும்.

ஆனால், நாம் மறுத்துவிட்டோம். நமது நடுநிலையான நிலைப்பாட்டை நாம் உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com