இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

image courtesy: AFP
இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொழும்பு,
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
இதன் எதிரொலியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த கேத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி நிலவுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கி உள்ளார்.
இந்த நிலையில் காலை 7 மணிக்கு அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் இன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும் என்றும், நாளை மதியத்துக்குள் இலங்கையின் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.






