

கொழும்பு,
இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்வேறு நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற கூட்டுப்பயிற்சி வங்காளவிரிகுடா கடலில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஈரானை சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக போர் கப்பலும் பங்கேற்றது.
இந்த கூட்டுப்பயிற்சிக்குப்பின் விசாகப்பட்டினத்தில் இருந்து ஐஆர்ஐஎஸ் டினா ரக ஈரான் போர் கப்பல் ஈரானுக்கு புறப்பட்டது. போர் கப்பலில் ராணுவ வீரர்கள் உள்பட 180 பேர் பயணித்தனர்.
ஈரான் போர் கப்பல் இன்று அதிகாலை இலங்கையின் கலி நகர் அருகே இந்திய பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஈரான் போர் கப்பலை குறிவைத்து அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் போர் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
அதேவேளை, போர் கப்பலில் இருந்தவர்கள் உதவிகேட்டு அவசர அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து அறிந்த இலங்கை கடற்படையினர், விமானப்படையினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 32 பேரை உயிருடன் மீடனர். ஆனால், கப்பலில் இருந்த எஞ்சிய 148 பேரின் நிலை என்ன? அவர்கள் உயிரிழந்தனரா? என்ற அஞ்சம் நிலவி வந்தது.
இந்நிலையில், அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரான் போர் கப்பலில் பயணித்தவர்களில் 87 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து, கடலில் மூழ்கி மாயமான எஞ்சிய 61 பேரின் நிலை என்ன? அவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டனரா? என்பது குறித்து அவர்களை தேடும் பணியையும் இலங்கை கடற்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.